டெல்லியில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்கவேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்களவை ஒத்திவைப்புக்குப் பிறகான கேள்வி நேரத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதால் தமிழக மக்கள் பெரிம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசாங்கம் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி-க்கு ஆதாரவாக ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறவோ, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவோ அவசியமில்லை எனக் கூறியிருக்கிறது.
இந்த திட்டத்திற்கு டெல்டா மாவட்ட விவசாயிகளின் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், இந்த அரசாணை வெளியானது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசானைக்கு எதிராக டெல்டா பகுதியில் தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது.
எனவே இதுபோன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி முக்கியம் என்பதை உணர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக அரசு கொண்டுவந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.