மாநிலங்களவைக்குள் எம்.பி.க்கள் மாஸ்க் அணிய வேண்டாம் - மாநிலங்களைத் தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள்.
பொதுமக்கள், முக்கிய நபர்களை தொலைபேசிகள் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டிருப்பது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாட்களை அரசு குறைப்பது குறித்து ஆலோசிக்க அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலவக்காரர்களுக்கு டெல்லி போலிஸ் உதவியதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் டெல்லி கலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரவி வரும் கொரோனா காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெற உள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஏப்ரல் 3 வரை தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது.
டெல்லி வன்முறை செய்தியை வெளியிட்ட இரண்டு கேரள தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரள எம்.பி.கள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
காவிரி டெல்டாவை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவையை ஒத்திவைத்து விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு ஆகியவை கட்டாயமல்ல எனும், அரசாணையை திரும்ப பெற வேண்டும்.
- மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா கோரிக்கை.
உயர்நீதிமன்றத்தின் காலிப் பணியிடங்களை நிரப்ப கொலிஜியம் அளித்த பரிந்துரை மீது மத்திய அரசு உடனே முடிவெடுக்க வேண்டும்.
- மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் வலியுறுத்தல்.
மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க தி.மு.க எம்.பி., திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பியதால் அவை பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் அவை பிற்பகல் 2 மணிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி உடனே விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து மாநிலங்களவை நிகழ்ச்சிகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து விவாதிக்குமாறு மக்களவையில் எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டுள்ளனர். மக்களவையில் மற்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து சட்டத் திருத்தம் பற்றி விவாதிக்குமாறு முழக்கம் எழுப்பப்பட்டது.
2.5 லட்சம் - 5 லட்சம் வரை - 5% (மொத்த வருமானத்தில் 2.5 லட்சம் கழித்து) + 4% செஸ்
5 லட்சம் - 7.5 லட்சம் - 10%
7.5 லட்சம் - 10 லட்சம் - 15%
10 லட்சம் - 12.5 லட்சம் - 20%
12.5 லட்சம் - 15 லட்சம் - 25%
15 லட்சத்துக்கு மேல் - 30%
புதிய முறையில் வரி செலுத்த விரும்புவோர் வரி சலுகைகளைப் பெற முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய முறை அல்லது புதிய முறை என இரண்டில் ஒன்றை வரி செலுத்துவோரே முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு காப்பீடு அதிகரிக்கப்படும். டெபாசிட் தொகைக்களுக்கான காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.
தூத்துக்குடி மாவட்ட ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். - நிர்மலா சீதாராமன்
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலநிலை முடிவுக்கு கொண்டுவரப்படும். மனித கழிவுகளை அகற்ற புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்படும். - நிர்மலா சீதாராமன்
ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ரூ.35,6000 கோடி ஒதுக்கப்படும். பெண்களின் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.28,600 கோடி ஒதுக்கப்படும். - நிர்மலா சீதாராமன்
ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை என்பது தொடர்கிறது.
“12.15 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும். 15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும்” - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 15 % வரி செலுத்தினால் போதும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதமாக உள்ளது. இனிமேல் அது 20 சதவீதமாக குறைக்கப்படும்.
தனி நபர் வருமான வரியில் சலுகைகள் தரப்படுகின்றன. ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். தற்போது இது 20 சதவீதமாக உள்ளது.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஸ்மார்ட் மின் மீட்டர், பிரீபெய்டு மின் மீட்டர்கள் திட்டம் கொண்டுவரப்படும் - நிர்மலா சீதாராமன்
"இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு சலுகைகளும், உதவிகளும் வழங்கப்படும்." - நிர்மலா சீதாராமன்
திறன் மேம்பாட்டுக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இந்தியாவின் வணிகம், தொழில் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும். - நிர்மலா சீதாராமன்.
கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.
கல்வித்துறைக்கு 93,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு. - நிர்மலா சீதாராமன்
தனியாருடன் இணைந்து மாவட்டந்தோறும் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும். புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிகளவில் உருவாக்கப்படுவார்கள். - நிர்மலா சீதாராமன்
விவசாயம் குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டினார். ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடியைக் குறிப்பிட்ட அவர், விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் என்ற அதன் விளக்கத்தையும் குறிப்பிட்டார்.
மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 150 புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
புதிதாக தேசிய காவல்துறை மற்றும் தடயவியல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். - நிர்மலா சீதாராமன்
சுகாதாரத்தை பேண தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.
சுகாதாரத்துறைக்கு 69,000 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும். - நிர்மலா சீதாராமன்
அடுத்த 5 ஆண்டுகளில் பால் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும். சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமங்களில் விவசாயக் கிடங்குகள் அமைக்க அனுமதிக்கப்படும். - நிர்மலா சீதாராமன்.
இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகளை கொண்டுச் செல்ல ரயிலில் பிரத்யோக ஏ.சி பெட்டிகள் இணைக்கப்படும்.
பால், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தனி ‘விவசாயி’ ரயில் இயக்கப்படும்.
விளை பொருட்களைக் கொண்டு செல்ல தனி விமானம் இயக்கம். - நிர்மலா சீதாராமன்.
நவீன முறை விவசாயத்தால் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க 16 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார் வாங்க நிதியுதவி அளிக்கப்படும். 15 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் மின் வசதி செய்து கொடுக்கப்படும்.
பண்ணை தொழிலை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். தரிசு நிலங்களில் சூரிய மின்னுற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிர்மலா சீதாராமன்.
விவாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் வருவாயை இரட்டிப்பாக்குவதே அரசின் இலக்கு! - நிர்மலா சீதாராமன்.
இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்.
உலகிலேயே ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2006 - 2016ம் ஆண்டுக்குள் 27 கோடி பேர் வறுமைக்கோட்டிலிருந்து வெளிவந்துள்ளனர்.
2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு, மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையுடன் நாடாளுமன்றம் வந்தடைந்தார். கடந்த ஆண்டைப் போலவே சிவப்பு நிற துணியில் பட்ஜெட் உரை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கிய அரசின் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
- டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், இந்திய அரசியல் சாசனத்தை காப்பாற்றக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகிறது. இன்றைய கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்.