குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் தலைநகரான டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தினத்தன்றும்கூட, ஓயாமல் போராட்டக்காரர்கள் பா.ஜ.க. அரசு எதிராக போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இருப்பினும், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தனது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது மோடி அரசு. அந்த வகையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் போது குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒருவர் முழக்கமிட்டதை அடுத்து, பா.ஜ.க., தொண்டர்கள் சிலர் அந்த நபர் மீது அங்கிருந்த இரும்பு நாற்காலிகளைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
அதனைக் கண்ட அமித்ஷா, கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் யாரும் திரும்பி பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், பா.ஜ.க.,வினர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முழக்கமிட்ட நபரைத் தாக்கிவிட்டு “பாரத் மாதா கி ஜெய்” என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசையும், மக்களுக்கு எதிராக பல்வேறு சதி திட்டங்களை தீட்டும் பா.ஜ.க.,வின் மதவாத செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அமித்ஷாவை கடுமையாக சாடி ட்வீட் செய்துள்ளார்.
அதில்,“உள்துறை அமைச்சர் அமித்ஷா தைரியமில்லாதவர். அவருடைய காவல்துறை, குண்டர்கள், ராணுவத்தினரை கட்டுப்படுத்தி தனக்கான பாதுகாப்பை அதிகரித்துக்கொள்கிறார்.
ஆனால், போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்துகின்றனர். குறுகிய மற்றும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் என்றால் அது அமித்ஷாவாகதான் இருக்கும். வரலாறு இந்த மிருகத்தின் மீது காறி உமிழும்” என அனுராக் பதிவிட்டுள்ளார்.