பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள் என பல தரப்பில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், தனக்கு இருக்கக்கூடிய அதிகார பலத்தை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த மத்திய மோடி அரசு நேற்று முன் தினம் இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்ற வந்தபோதும் மத்திய அரசு தான் இயற்றிய சட்டத்துக்கான அரசாணை வெளியிட்டு சர்வாதிகாரத்தை நிலைநாட்ட பார்க்கிறது என கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.கவின் மதவாத சட்டங்களுக்கும், நடவடிக்கைகளும் எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். இதனால் சொந்த வாழ்விலும் அனுராக் காஷ்யப்புக்கு பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், அண்மையில் ஜே.என்.யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை எதிர்த்து மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திலும் ஈடுபட்டவர் அனுராக் காஷ்யப்.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கான அரசாணை வெளியானதை அடுத்து, கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் அனுராக் காஷ்யப்.
அதில், “அரசியல் அறிவியல் படிப்பில் நீங்கள் பெற்ற பட்டத்தை முதலில் காட்டுங்கள், பின்னர் உங்களுடைய தந்தையின் பிறப்புச் சான்றிதழ், அதன் பிறகு அவருடைய அப்பாவின் பிறப்புச் சான்றிதழை காட்டுங்கள். பின்னர் எங்களிடம் ஆவணங்களை கேளுங்கள்.”
அதேபோல, “முதலில் எழுதவும், படிக்கவும் தெரியுமா என்பதை நிரூபிக்கட்டும். அதன் பிறகு பேசலாம்” என அனுராக் காஷ்யப் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், “அவர்களுக்கு (அரசுக்கு) பேசத் தெரிந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள். அவர்களால், சரிபார்க்கப்பட்ட ஒரு கேள்வியை கூட எதிர்கொள்ள முடியாது.
அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை; இது ஒரு குப்பையான அரசு; குடியுரிமை சட்டத் திருத்தம் பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற கொடுமைப்படுத்துவதற்கு சமம்” என கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.