அகமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றதால், பயணிகள் அனைவருக்கும், தலா ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் - மஹாராஷ்டிர மாநிலம் மும்பை இடையிலான, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், கடந்த 19ம் தேதி துவங்கியது.
தேஜஸ் ரயில், தாமதமாக இயக்கப்பட்டால் பயணிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்து இருந்தது. அதன்படி, அகமதாபாத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
இதையடுத்து, ரயிலில் பயணித்த, 630 பயணிகளுக்கு தலா 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி நேற்று அறிவித்தது. இழப்பீடுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.