நாட்டிலேயே முதன்முறையாக தனியார் இயக்க உள்ள தேஜஸ் ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி மற்றும் லக்னோ ஆகிய நகரங்களுக்கு இடையே அக்டோபர் மாதம் முதல் இயக்கப்படவுள்ள தேஜஸ் ரயிலில், விமானங்களில் உள்ளது போல பயணிகளுக்கு உதவி செய்யும் வகையில் உபசரிப்பு பெண்கள் இருப்பார்கள்.
மும்பை - அகமதாபாத் இடையே தனியார் இயக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இந்த வசதிகள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
மேலும், வீடுகளில் இருந்து உடைமைகளை எடுத்து வருவதற்கும், ரயிலில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்வதற்குமான வாகனங்கள், தங்கும் விடுதி, விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை ஐ.ஆர்.சி.டி.சி மூலம் தேஜஸ் ரயில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு வசதியாக சக்கர நாற்காலி, கேட்டரிங் சேவை மற்றும் ரயில் நிலையங்களில் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு மையம், உள்ளிட்ட வசதிகளும் உயர்வகுப்பில் பயணம் செய்வோருக்கு வழங்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.
தேஜஸ் ரயிலின் பயணக் கட்டணம் அவ்வப்போது மாறிகொண்டே இருக்கும் எனவும், ஆனாலும் விமான கட்டணத்தை விட குறைவாகவே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.