சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ வேண்டுமென்றால் பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்-அப்பிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் வங்கியின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கியின் அறிவிப்பைக் கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்காக ஒரே நேரத்தில் வங்கியில் குவிந்தனர்.
மக்களின் எதிர்ப்பால் திணறிய வங்கி நிவாகம் செய்வது அறியாது திகைத்துள்ளது. இதையடுத்து ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும், தேசிய மக்கள்தொகை பதிவேடு கட்டாயமாக செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று வங்கி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வங்கியின் விளக்கத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள் தங்களது கணக்குகளை ரத்து செய்வது, பணத்தை திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தங்கள் கணக்கிலிருக்கும் பணத்தைத் திரும்பப் பெற்று வருகின்றனர்.