குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அவசியமற்றது என வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைகள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய அரசு ஏன் கொண்டுவந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. அது அவசியமற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும் இந்தியாவின் உள்விவகாரங்கள் என்றுதான் இருநாடுகளும் தொடா்ந்து கூறி வருகின்றன. இந்தியா-வங்தேசம் இடையிலான உறவு, தற்போது சிறப்பாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது எனக் கூறினார்.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விமர்சித்திருந்தார். இதையடுத்து மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யவேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.