மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தள்ளது. மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக, ஆங்காங்கே சில இடங்களில் பா.ஜ.கவினர் பேரணி நடத்தி வருகின்றனர். அதன்படி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள பியோவோரா பகுதியில் பேரணி நடத்த பா.ஜ.க திட்டமிட்டிருந்தது.
மாநிலத்தில் நிலவும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், ஆதரவு பேரணிக்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததுள்ளது. அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாகச் செல்ல முயன்ற போது அவர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் சாலைகளை மறைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை ஆட்சியர் பிரியா வர்மா போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பா.ஜ.கவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை கைது செய்யுமாறு துணை ஆட்சியர் பிரியா வர்மா உத்தரவிட்டதோடு, சிலரை அப்புறப்படுத்தவும் முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் பிரியா வர்மாவை முற்றுகையிட்டனர். நெரிசலில் சிக்கிய துணை ஆட்சியரை மீட்க முயற்சிக்கும்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பிரியா வர்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக இழுத்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்த வீடியோவும் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.