மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு குடியுரிமை சட்டத்தை சமீபத்தில் கொண்டுவந்தது. அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக மணவர்கள் இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலுவான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, எழுத்தாளர்கள், தலைசிறந்த பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தங்களின் விருதுகளை திருப்பியளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, “நாட்டில் நிலவும் நிலைமை வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சத்யா நாதெல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தற்சமயம் நடக்கும் நிகழ்வுகள் என்னை வருத்தப்பட வைக்கின்றன. இது மோசமானது என நினைக்கிறேன். வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்தியாவில் வாழ்ந்து அவர் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வரவேண்டும் என்பதே என் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரது இக்கருத்தை விரிவாக குறிப்பிட்டு மைக்ரோஃசாப்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு நாடு தனக்கான எல்லைகளை வரையறுத்து தன் தேசத்தை பாதுகாத்து அதற்கு ஏற்றவாறு குடியுரிமை தொடர்பான கொள்கைகளை உருவாக்கும்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் மற்றும் அதன் அரசாங்கமும் இணக்கமான முறையில் சிறந்த விவாதத்தை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எனது இந்தியப் பாரம்பரியம், நான் வளர்ந்த இந்தியப் பன்முகக் கலாச்சாரம்; எனது அமெரிக்க குடிபெயர்வு அனுபவம் ஆகியவைதான் என்னை வடிவமைத்தது.
அதேபோல், குடியேறிய ஒருவர் இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதையோ அல்லது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை தலைமையேற்று இந்தியச் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக மாற்றுவதையோ நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தக் கருத்தை, வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா, எழுத்தாளரும் கட்டுரையாளருமான சதானந்த் துமே ஆகியோர் வரவேற்றுள்ளனர்.