இந்திய பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டொமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.
மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையொட்டி, பொருளாதாரத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கும் விதமாக ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சரே கலந்துக்கொள்ளாதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் தனது முதலாளித்துவ மற்றும் பணக்கார நண்பர்களுக்காக பிரதமர் மோடி நடத்தியுள்ளார் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சூட் பூட் சர்க்கார் என்ற ஹேஸ்டேக்குடன் “பிரதமர் மோடியின் மிகவும் விரிவான இந்த பட்ஜெட் ஆலோசனையானது, தனது முதலாளித்துவ நண்பர்கள் மற்றும் பணக்கார நணபர்களுக்காக மட்டுமே செய்யப்படுகிறது.
விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு மற்றும் சிறு தொழில் செய்வோர், நடுத்தர வரி செலுத்துவோர் இவர்களின் நலனில் எல்லாம் அக்கறை என்பதே கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெளியான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் இல்லாததால் நிர்மலா சீதாராமன் எங்கே?, நிதி அமைச்சர் இல்லாமல் ஏன் நிபுணர்களுடன் மட்டும் ஆலோசனைக் கூட்டம்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேப்போல், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நிதி அமைச்சர் எங்கே? அல்லது நிதி அமைச்சர் என ஒருவர் இருப்பதை மறந்துவிட்டார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.