மத்திய பா.ஜ. அரசு, புதுச்சேரி மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நியமித்து அம்மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.
சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புவது கிரண்பேடிக்கு கைவந்த கலை என்று அம்மாநில அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது அறிவியலையே கேள்விக்குறியாக்கும் ட்விட்டர் பதிவொன்றை கிரண்பேடி வெளியிட்டுள்ளார்.
சூரியன் தனது வெப்ப அதிர்வலைகளை வெளிப்படுப்படுத்தும் போது அதிலிருந்து சத்தம் வெளியாகும் என முன்பே ஆராய்ச்சியில் கண்டறிந்தனர். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் சோனார் ஒலியை வெளியிட்டுள்ளது. இதுவே கொஞ்சம் பழைய செய்தியாகும்.
ஆனால், இந்த செய்தியை தற்போது கையில் எடுத்துக்கொண்ட பா.ஜ.க மற்றும் இந்துத்துவா கும்பல், சூரியனின் அதிர்வலைகளை செயற்கை சத்தங்களுடன் இணைத்து சூரியன் கடவுளின் பெயரை உச்சரிக்கிறது என்று பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் தற்போது பொய்யாக பரப்பப்படும் போலி வீடியோவை உண்மை இல்லை என தெரிந்தும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படித்த அறிவுடையோர் இதுபோல அறிவியலுக்கு புறம்பான செய்திகளை பகிரலாமா? என கிரண்பேடி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக, கருத்துதெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், “கிரண்பேடிக்கு இது உண்மை அல்ல என தெரிந்தே, பகிர்ந்துள்ளார். இதற்கு காரணம் இந்துத்துவா பற்றாளர்களில் தானும் ஒருவர் என்பதை அவர்கள் கும்பலுக்கு நிரூப்பிக்க விரும்பிகிறார்.
இது ஏதோ இவரால் தொடங்கப்பட்டது அல்ல, பிரதமர் முதல் அவர்களின் சகாக்கள் வரை இதை செய்து வருகிறார்கள். பண்டைய இந்தியர்கள் விமானங்களை ஓட்டினர். அவர்கள் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதே போல் விண்வெளி ஆயுதங்களை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியுள்ளனர் என்றும், இதற்கெல்லாம் ஏராளமான ஆதாரங்கள் உண்டு என்றும் ரீல் விடுகின்றனர். தற்போது பசும்பாலில் தங்கம் உள்ளது என்றும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுகின்றனர். இதில் லேட்டஸ்டாக கிரண்பேடி சேர்ந்துள்ளார்”எனத் தெரிவித்தார்.