மோடி அரசு கொண்டுவந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிசுமை என்று சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து நாட்டில் உறுதியற்ற நிலையை உருவாக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தலைவராக இருந்தபோது, அனைத்து நேரங்களிலும் பொய் பேசுவார். இப்போதும் தொடர்ந்து பொய் பேசுகிறார். இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அதை பெறுபவர் ராகுல் காந்தி என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள ராகுல் காந்தி, “நாட்டில் எந்த தடுப்புக்காவல் முகாம்களும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்த வீடியோவை நான் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தேன்.
ஆனால், அதே வீடியோவில் தடுப்பு முகாம்கள் இருப்பது பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன. எனவே, யார் பொய் சொல்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல், விமர்சித்தவர்கள் மீது பழிபோடும் நடவடிக்கைகளை பா.ஜ.க அரசும் அதன் அமைச்சர்களும் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.