பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
இஸ்லாமியரையும், ஈழத் தமிழர்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பி மக்களைப் போராட்டத்திற்கு தூண்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடத்த தேவையில்லை. அதுபற்றி மத்திய அரசும் விவாதிக்கவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடி அளித்த விளக்கம் முற்றிலும் சரியானது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (NRC), தேசிய மக்கட்தொகை பதிவேட்டிற்கும் (NPR) எந்த சம்பந்தமும் கிடையாது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கியுள்ளது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து, அசாதுதீன் ஓவைசி அமித்ஷா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள A.I.M.I.M கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "1955ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்.
என்.ஆர்.சியின் முன்னோட்டம் தான் என்.பி.ஆர். 2020ம் ஆண்டுக்குள் இதனை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. உள்துறை அமைச்சர் இப்போது நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்.
நாடுமுழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டே தீரும் என நாடாளுமன்றத்தில் விவாதத்தின்போது என்னைப் பார்த்து அமித் ஷா ஆவேசமாக கூறினார். பிறகு மக்களை இப்போது அவர் ஏமாற்ற முயற்சி செய்வது ஏன்? கிழக்கில் தான் சூரியன் உதிக்கும். இந்த உண்மையை யாராலும் மறைக்க யாராலும் முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.