குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்கட்சிகள் மட்டுமல்லாது, மாணவர்களும் முன்னெடுத்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நாள் முதல் கடுமையாக எதிர்த்து வந்த மாணவர்களுக்கு விடுமுறை அளித்தும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் வீரியத்தை குறைக்க முடியாமல் பா.ஜ.க அரசு தோல்வி அடைந்துள்ளது.
குறிப்பாக ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு, வன்முறையாக மாற்றி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது டெல்லி போலிஸ். மேலும், போலிஸாரின் தாக்குதலால் பல மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், போலிஸாரின் தாக்குதல் சம்பவத்தின்போது மாணவர் ஒருவர் தனது ஒரு கண்ணில் பார்வையை இழந்துள்ளார். இதுகுறித்து பார்வையைப் பறிகொடுத்த முகம்மது மின் ஹாஜுதீன், டெல்லியில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “தலைநகரில் சட்டப்பற்சியை தொடங்கவேண்டும் என்ற கனவுடன் பிகாரில் இருந்து டெல்லிக்கு படிக்கவந்தேன். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்பு எனது கனவை சிதைத்துள்ளது.
போராட்டம் நடைபெற்ற அன்று, வெளியாட்கள் உள் நுழைந்ததாகச் சொல்லிய உள்ளே நுழைந்த போலிஸார் ஒரு வெளியாட்களைக் கூட கண்டுபிடிக்கவில்லை. அதற்கு மாறாக மாணவர்களையே குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள்.
நான் சம்பவத்தின்போது MPhil மாணவர்களுக்காக நூலகத்தில் ஒதுக்கப்பட்ட அறையில் படித்து கொண்டிருந்தேன். போலிஸாரின் தாக்குதலுக்கு பயந்து பல மாணவர்கள் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தார்கள்.
ஆனாலும் போலிஸார் கண்ணீர் புகைகுண்டு வீசி கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதில் நான் செய்த தவறு என்ன? அப்போது நடந்த தாக்குதலில் எனது கண்ணில் பலத்த அடி விழுந்து, தற்போது பார்வை பறி போய்விட்டது.
இந்த பாதிப்பு அடுத்த கண்ணிலும் தொற்ற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு, என்னால் வளாகத்திற்குள் முடியவில்லை. பாதுகாப்ப உணரவில்லை. எனது கனவையும் இப்போது உணர முடியவில்லை” என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.