குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்கள் நேற்றிலிருந்து போராட்டத்தை துவங்கியுள்ளனர். நேற்று அமைதியாக தொடங்கிய போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
இந்த வன்முறைக்கு போலிஸாரே காரணம் என மாணவர்கள் தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியே வர முயன்ற மாணவர்களை தடுக்க போலிஸார், தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
இந்த தடியடியால் ஆத்திடரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் போலிஸாருடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால் சிறிது நேரத்தில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குள் மர்ம நபர்கள் புகுந்ததாகவும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த காரணத்தைக் கூறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த மாணவர்களை காவல் துறையினர் கைது செய்யத் தொடங்கினர். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க போலிஸார் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த காவல் துறையினர் மாணவர்கள் மீது கண் மூடித்தனமாக தாக்கினர். வகுப்பறை, நூலகத்தில் பதுங்கிய மாணவர்களை விரட்டிச்சென்று போலிஸார் தடியடி நடத்திவருகின்றனர். மேலும் மாணவர்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். மேலும் வளாகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைத்து போலிஸார் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் போலிஸாரின் தாக்குதலுக்கு பயந்து வளாகத்தில் சிதறி ஓடும் காட்சி காண்போரை பதற்றம் அடைய செய்கிறது. பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். போலிஸார் நடவடிக்கைகள மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், வளாகத்திற்குள் புகுந்த போலிஸார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கி சூடு நடத்துவதும் தெரியவந்துள்ளது.
மேலும் போலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டில் பல்கலைக்கழக கழிவறையில் சில மாணவர்கள் மயங்கி விழுந்து கிடக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஒரு மாணவரின் கால் பகுதியில் போலிஸாரின் தூப்பாக்கி குண்டும் பாய்ந்துள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அவர்கள் கைகளை மேலே தூக்கிய படி கிரிமினல்கள் போல வரிசையாக செல்ல கட்டாயப்படுத்தியுள்ளனர். மாணவர்களை குற்றவாளிகள் போல் நடத்திய சம்பவம் பெரும் வேதனை அளிப்பதாக பல்கலைக்கழக மாணவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
"பல்கலைக்கழக வளாகத்துக்குள் காவல் துறை எந்தவித அனுமதியும் இன்றி நுழைந்துள்ளனர். எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அடித்து, பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்." என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போலிஸார் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து ஹோலி பேமிலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், பல மாணவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய மாணவர்கள் மீது காவல் துறை நடத்தும் இந்த வன்முறை வெறியாட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தை ஒடுக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்று தன் முகத்திரையை காட்டியுள்ளது மோடி அரசு.