குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீயாகப் பரவி வருகின்றன. கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என உறுதிபடத் தெரிவித்து அம்மாநில முதலமைச்சர்களே போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், “பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியுள்ளது பா.ஜ.க அரசு. புதுச்சேரியின் முதலமைச்சராக சொல்கிறேன், இந்த குடியுரிமை சட்டத்தை நிச்சயம் எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன். எப்பாடுபட்டாவது இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவோம்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஆட்சியே கலைந்தாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என நாராயணசாமி பேசியிருந்தது பெருமளவு வைரலானது. அதேபோல் தற்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடுமையாகப் பேசியிருப்பதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.