மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் எட்டாம் நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. இந்த பேரணிக்கு அம்பேத்கர் கொள்கைகளை முன் வைத்து ’பீம் ஆர்மி’ அமைப்பை நடத்திவரும் தலைவர் சந்திரசேகர் ஆஸாத் அழைப்பு விடுத்தார்.
ஆனால், போலிஸார் இந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆஸாத் கைது செய்யப்பட்டதாகவும் அதனால் பேரணி நடத்தக்கூடாது எனவும் போலிஸார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜூம்மா மசூதியில் தொழுகைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று சென்றனர். அப்போது ஜூம்மா மசூதியைச் சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கில் போலிஸார் குவிக்கப்பட்டனர். சந்திரசேகர் ஆஸாத் அங்கு வந்தால் அவரைக் கைது செய்ய போலிஸாருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டு இருந்தது.
மதியம் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வழியுறுத்தியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், போலிஸாரின் தடுப்பு அரணை மீறி அரசியலமைப்பின் நகலையும், அம்பேத்கரின் புகைப்படத்தையும் கையில் ஏந்திக்கொண்டு சந்திரசேகர் ஆஸாத் போராட்டக்காரர்களிடையே தோன்றினார். இதனால் போலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
முன்னதாக, பேரணி தொடர்பாக ட்விட்டரில் பேசிய ஆஸாத், “தயவுசெய்து நான் கைது செய்யப்பட்ட பரவும் வதந்திகளைப் புறக்கணிக்கவும். இன்று நடைபெறும் போராட்டத்தில் நிச்சயம் நான் ஜூம்மா மஸ்ஜித்தை அடைவேன்” என்று அவர் ட்வீட் செய்து இருந்தார்.
அவர் சொன்னபடியே, ஆஸாத் முழக்கங்களை எழுப்ப போராட்டக்காரர்கள் டெல்லி வீதியில் பேரணி சென்றனர். அப்போது பேரணிக்கு தலைமைத் தாங்கிய சந்திரசேகர் ஆஸாத்தை டெல்லி போலிஸார் கைது செய்தனர்.
இருப்பினும், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கரின் வழியில் தொடர்ந்து போராடி வரும் சந்திரசேகர ஆஸாத்துக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.