மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் நாடுமுழுவதும் போராட்டம் நடத்துவதாக இன்று அறிவித்திருந்தனர். இதையடுத்து பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா கலந்துகொண்டார். அப்போது அவரைத் தடுத்த போலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து இதுகுறித்து பேட்டியளித்த ராமச்சந்திர குஹா, “இந்த அரசாங்கத்தின் குடியுரிமை சட்டத்திற்கு எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியதற்காக என்னை போலிஸார் கைது செய்துள்ளனர். இங்கே அமைதியாக போராட்டம் நடைபெறுகிறது.” என அவர் தெரிவித்தார்.
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹாவை பெங்களூரு போலிஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.