மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்காக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை இயற்றிய கையோடு, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வரவுள்ளது பா.ஜ.க. அதன்படி, மக்களின் பூர்வீகம் கணக்கெடுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களின் குடியுரிமையை நிராகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முன்னதாக அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 40 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தன. இதையடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறு மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது.
அசாமில் வசிக்கும் பலரும், முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, பெயர்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், 3 கோடியே 11 லட்சத்து 21ஆயிரம் பேர் அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வ இந்திய குடிமக்களாக அறிவிக்கப்பட்டனர்.
19 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த 19 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களின் பெயர் இடம் பெறவில்லை.
கடந்த 1947 – 1977 வரை இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத்தலைவராக இருந்தவர் ஃபக்ருதீன் அலி அகமது. சிறந்த குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்ற இந்திய நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளார். ஆனால் தற்போது அவரது குடும்ப உறுப்பினர்களான சகோதரரின் மகன் குடும்பத்தின் பெயர்கள் என்.ஆர்.சி-யில் இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக, ஃபக்ருதீன் அலி அகமது உறவினர் சஜீத் ஆலி அகமது கூறுகையில், “எனது தாத்தாவின் பெயர் இக்ராமுதீன் அலி அகமது அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவின் சகோதரர். அவரின் பேரன் நான்.
பல ஆண்டுகாலமாக ரோங்கிய துணைப்பிரிவின் கீழ் உள்ள பார்பாகிய கிராமத்தில் தான் வசிக்கிறோம். உள்ளூர்வாசிகளாக வாழும் எங்களுக்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள் இல்லை. எங்களை இந்நாட்டை சேர்ந்தவரல்ல என மறுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளனர். முறையாக ஆவணங்கள் அளித்தும் இப்போது பெயர் பட்டியலில் பெயர் அல்ல” எனத் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ. அதிகாரிகள் அரசு ஊழியர்கள் பலரது பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி, பல குடும்பங்களில் ஒரு சிலரது பெயர்கள் விடுபட்டுள்ளன.
குடும்பத்தில் தந்தை பெயர் இருந்தால் மகன் பெயர் இடம்பெறாதது, மகள் பெயர் இருந்தும், தாய் பெயர் இடம்பெறாதது என பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பல்வேறு புகார்கள் கிளம்பியுள்ளன.