பா.ஜ.க அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை மற்றும் உத்தர பிரதேசத்தின் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னதாக போராட்டம் நடத்தினர். அப்போது, போராடிய மாணவர்கள் மீது போலிஸார் தாக்கியதால் கல்லூரி வளாகமே வன்முறைக் களமானது.
போராட்டத்தின்போது, பல்கலைக்கழகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 4 பஸ்கள் மற்றும் 2 போலிஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறைக்கு போலிஸாரே காரணம் என மாணவர்கள் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜபார்பாத் பகுதியில் இன்று மீண்டும் போராட்டம் வெடித்தது. போராட்டம் காரணமாக சீலாம்பூர், ஜபார்பாத் இடையிலான சாலை மூடப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையமும் மூடப்பட்டது.
சீலாம்பூர் பகுதியில் போராட்டக்காரர்களும், போலிஸாரும் சாலையில் நேருக்கு நேர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலிஸாரும், மாணவர்களும் மாற்றி மாற்றி கல்வீச்சில் ஈடுபட்டதில் பேருந்துகள் சேதமடைந்தன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.