குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, அசாம், திரிபுரா மாநிலங்களில் மக்கள், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைழகத்தின் மாணவர்களும் நேற்றிலிருந்து போராட்டத்தை துவங்கியுள்ளனர். நேற்றைய தினம் தொழுகைக்கு பின் வளாகத்தினுள் கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்திய அரசிற்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது வளாகத்தின் உள்ளே இருந்த மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட வராதபடி டெல்லி போலிஸார் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தடுப்புகள் மீது ஏறி வளாகத்தின் வாயிலை விட்டு வெளியே வந்தனர்.
அப்போது, டெல்லி போலிஸார் வளாகத்தினுள்ளும் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதன் பிறகும் மாணவர்கள் கூட்டம் கலையாமல் இருக்கவே அங்கு கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. போலிஸாரின் இந்த தாக்குதலால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக அருகிலுள்ள ஹோலி ஃபேமிலி தனியார் மருத்துவமையில் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே, ஜாமியா பல்கலைகழகத்தின் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை டெல்லி போலிஸார் காவல்நிலையத்திற்கு பிடித்துச் சென்றனர். இதனால், டெல்லியில் அப்பல்கலைகழகம் அமைந்துள்ள ஒக்லா பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
இதற்கிடையில் இன்று மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் நோக்கி அமைதியாக பேரணி நடத்தினர். ஆனால், பேரணியை தடுத்த காவல்துறை, மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.
புகை குண்டுகளை வீசியதில் பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதனால் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் நிலவியது. பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் பேருந்து ஒன்று தீ வைக்கப்பட்டது. இதனை மாணவர்கள் செய்தார்கள் என போலிஸார் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் அந்த பேருந்தை போலிஸாரே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாக மாற்றுவதற்கு போலிஸார் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் தற்போது அம்பலமானது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதத்தில், போலிஸாரின் வன்முறை புகைப்படங்களை டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பா.ஜ.க காவல்துறையை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுவருதாகவும், பேருந்துகளுக்கு தீவைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இது மிகவும் கீழ்த்தனமான அரசியல் என கடுமையாக விமர்சித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துமீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து காவல்துறை வெளியாட்களை வைத்து வன்முறை நிகழ்த்துகிறது என பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை வெறியாட்டம் ஆடிய காவல்துறை, சமூக விரோதிகள் போராட்டத்தில் கலந்துவிட்டனர் என்று காரணம் கூறியது.
அதையே தான் டெல்லி காவல்துறையும் செய்து வருகிறது. மாநிலங்கள் வேறாக இருக்கலாம், ஆனால் காவல்துறை பின்பற்றும் முறை ஒன்றாகவே இருக்கிறது.
ஏற்கெனவே, உ.பி.யின் அலிகார் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த மாணவர்கள் போராட்டம் தீவிரமாகத் தொடர்ந்து வருவது மோடி அரசிற்கு பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.