இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லிம் இல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தனது பெரும்பான்மையை காண்பித்து வழக்கம் போல் நிறைவேற்றியுள்ளது மோடியின் பா.ஜ.க அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க எம்.பிக்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்புக் குரலையும் மக்களவையில் முன்வைத்தனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேச மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுபான்மையினர்களுக்கு எதிராக அமைந்துள்ள பா.ஜ.க அரசின் இந்த குடியுரிமை சட்ட மசோதா நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரையுலகத்தினர் மத்தியிலும் இந்த மசோதாவுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமா உலகின் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் குடியுரிமை சட்ட மசோதா குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில், #CitizenshipBill என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு அவர்கள் நம்மைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என பா.ஜ.க.வை சாடியுள்ளார்.
மேலும், “சிஸ்டத்தின் (சட்டம்) மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. அவர்களின் அகங்காரம் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது. ஆனால் நமது மதச்சார்பற்ற மனப்பான்மை உறுதியான ஒன்று. அது என்றும் உறுதியாகச் செயல்படும்” என பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டுள்ளார்.