பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
நேற்று நாள் முழுவதும் மக்களவையில் இந்தச் சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதையடுத்து இரவு 11.41 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற நடைபெற்ற வாக்குப்பதிவில் 311 எம்.பிக்கள் ஆதரவும், 80 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். பெரும்பான்மை ஆதரவு பெற்றநிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்நிலையில், மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி பேசுகையில், “இந்த மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இந்தச் சட்டம் மூலம் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக்கும். சீனாவால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் இந்தப் பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “இது ஹிட்லரின் சட்டத்தை விட மோசமானது. அதுமட்டுமின்றி உங்களிடம் (சபாநாயகர்) நான் ஓர் வேண்டுகோள் விடுக்கின்றேன். இத்தகைய சட்டத்திலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் மற்றும் உள்துறை அமைச்சரையும் காப்பாற்றுங்கள்.
இல்லையெனில் நியூரம்பெர்க் இனம் சட்டங்கள் மற்றும் இஸ்ரேலின் குடியுரிமைச் சட்டம் போன்றவற்றை கொண்டுவந்த ஹிட்லர் மற்றும் டேவிட் பென்-குரியனுடன் உள்துறை அமைச்சரின் பெயரும் இடம்பெறும்” என விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், “நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவமரியாதை செய்கிறது இந்த சட்டம். நமது நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கும் இத்தகைய சட்டத்தின் நகலை கிழிக்கிறேன் என்று கூறி” மசோதாவின் நகலையும் மக்களவையிலே கிழித்தெறிந்தார். ஓவைசியின் இத்தகைய நடவடிக்கைக்கு மக்களவையில் கடும் அமளி எழுந்தது.