ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது தப்பியோட முயன்ற 4 பேரையும் போலிஸார் சுட்டுக் கொன்றனர்.
ஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்யபல்லியைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவர் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில், பிரியங்காவை கடந்த 27-ம் தேதி 4 லாரி டிரைவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் 2 நாட்களில் கொலை செய்த 4 பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 14 நாட்கள் விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. கால்நடை மருத்துவர் கொலை சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், விசாரணைக்காக குற்றவாளிகள் முகமது ஆரீப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன் மற்றும் சின்டகுன்டா சென்னகேசவலு ஆகிய 4 பேரை கால்நடை மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு, சம்பவத்தை நடித்துக்காட்டச் செய்வதற்காக போலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது போலிஸாரின் பாதுகாப்பில் இருந்து 4 பேரும் தப்பியோட முயற்சி செய்தனர். இவர்களை தடுக்கமுடியாத நிலையில் போலிஸார் 4 பேரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் மேலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த என்கவுன்டர் குறித்து போலிஸார் இன்னும் முழு தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.