ஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்யபல்லியைச் சேர்ந்த ஸ்ரீதர், விஜயம்மா தம்பதியின் முத்த மகள் பிரியங்கா கால்நடை மருத்துவராக மாதாப்பூரிலும், இளைய மகள் பவ்யா விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பிரியங்கா நேற்று முன் தினம் வழக்கம் போல மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கி திரும்பியுள்ளார்.
பின்னர், அவசர அழைப்பு வந்ததும், மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிச் சென்றுள்ளார். இரவு 9 மணிவாக்கில் தனது இருசக்கர வாகனம் பஞ்சராகிவிட்டதாவும், மருத்துவமனையில் வரும் வழியில் வாகனத்தை தள்ளிக்கொண்டு வருவதாகவும் தங்கையிடம் செல்போனில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பகுதியில் சில லாரி ஓட்டுனர்கள் தன்னை முறைத்து பார்த்து வருவதாகவும், தனக்கு பயமாக இருப்பதாகவும், இங்கு அனைத்து பஞ்சர் கடைகளும் மூடி இருப்பதாவும் கூறியுள்ளார். பிரியங்காவிற்கு ஆறுதல் கூறிவிட்டு அப்பா உடன் அங்கு வருவதாக தங்கை பவ்யா கூறியுள்ளார்.
பின்னர் பத்து நிமிடத்தில் மீண்டும் பவ்யா போன் செய்தபோது பிரியங்காவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரியங்காவை அவரது பெற்றோரும் தங்கையும் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காத நிலையில் ஷேர் நகர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என பெற்றோர் புகார் ஒன்றை அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் சைபராபாத் போலிஸ் ஆணையாளர் சஞ்சனார் தலைமையில் பிரியங்காவை தேடிவந்தனர். அப்போது அதிகாலையில் ரங்காரெட்டி மாவட்டம், சட்டபல்லி பாலத்தின்கீழ் அடையாளம் தெரியாத பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் பாதி எரிந்த சடலத்தில் இருந்த மோதிரம், செயின் ஆகியவற்றை கைப்பற்றி, பிரியங்காவின் பெற்றோரிடம் காண்பித்தனர். இதை பார்த்த அவரது பெற்றோர், அவை தங்களது மகளுடையது தான் என்று கூறி கதறி அழுதனர்.
பின்னர் இதுதொடர்பான வழக்குப் பதிவு செய்த போலிஸார் பிரியங்காவை கடத்தி வந்து கொலை செய்தது லாரி ஓட்டுநர்களா? அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படு எரிக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
ஐதராபாத் போன்ற பெரிய நகரில் இளம் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.