கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் லாரி ஓட்டுநர்களால் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் வடு ஆறாத நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண்ணும், சிறுமியும் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் லிங்கம் குண்டா என்கிற கிராமம் உள்ளது.
இன்று காலை அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் ஒரு பெண் மற்றும் சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்ட அந்த வழியில் சென்ற பொதுமக்கள் போலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், எரிந்த நிலையில் இருந்த இரு சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட இடத்தில் நடத்திய ஆய்வில், இறந்த பெண்ணின் ரத்தம் சிந்தி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தால் அவர்களை கொலை செய்ய முயற்சித்தவர்கள் தாக்குதல் நடத்திவிட்டு பெட்ரோல் ஊற்றி எறித்துக் கொலை செய்திருப்பதாகப் போலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பலியான பெண் மற்றும் யார்? கொலை செய்தவர்கள் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை வழக்குப் பதிவு செய்த போலிஸார் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது, பெண்கள் பாதுகாப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளதாகப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.