மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவாரின் நிழலாக வலம்வந்தவர் அஜித் பவார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, அதிகாலை பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆதவு தந்து துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்.
தேசியவாத காங்கிரஸ் சார்பில் பாராமதி தொகுதியில் அமோக வெற்றி பெற்ற அஜித்பவார், கட்சித் தலைமையை மீறி பா.ஜ.க.,வுக்கு ஆதரவு அளித்தது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ஆனால், அஜித்பவாருடன் 4 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்தனர். ஒருகட்டத்தில் அவர்களும் சரத்பவாருடன் சென்று ஐக்கியமாகி விட்டனர். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை நீக்கி விட்டதாக சரத்பவார் அறிவித்து இருந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கைகளை அவர் எடுக்காமல் இருந்தார்.
சரத்பவாரின் அண்ணன் மகன்தான் அஜித்பவார். எனவே சரத்பவாரின் மனைவி பிரதீபா, மகள் சுப்ரியா சுலே, மருமகன் சதானந்த சுலே ஆகிய மூவரும் தொடர்ந்து அஜித்பவாருடன் பேசி வந்தனர். குறிப்பாக சரத்பவாரின் மனைவி பிரதீபா இடைவிடாமல் அஜித்பவாரிடம் பேசியபடி இருந்தார். குடும்பமே அஜித்பவாரின் பிரிவால் தவித்து வந்தது.
கரைக்கக் கரைக்க கல்லும் கரையும் என்பதுபோல், அவரது மனைவி பிரதீபாவின் உருக்கமான பேச்சு அஜித்பவாரின் மனதை கரைத்தது. தனித்து விடப்பட்ட அவர், அரசியலிலும், குடும்பத்திலும் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்தார்.
சரத்பவாரின் மகள் சுப்ரியாவும் தொடர்ந்து அஜித்பவாருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் அனுப்பியபடியே இருந்தார். குடும்பத்தை பிளவுபடுத்தி விடாதீர்கள் என்று அவர் கண்ணீர் மல்க வாட்ஸ்அப் செய்தி அனுப்பியது சமூக வலைதளங்களில் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதைப்போன்றே சரத்பவாரின் பேரனும், எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவாரும் சமூக வலைதளங்கள் மூலம் அஜித்பவாருக்கு அழைப்பு விடுத்தப்படியே இருந்தார். குடும்ப உறுப்பினர்களின் இந்தப் பாசம் அஜித்பவாரின் மனதை உலுக்கி எடுத்து விட்டது.
இந்த நிலையில் நேற்று காலை அஜித்பவாரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல்பட்டேல் மற்றும் சரத்பவாரின் மருமகன் சதானந்தசுலே இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போது சரத்பவார் மருமகன் பேசியதை கேட்டு அஜித்பவார் கண்ணீர் விட்டார்.
இதைத் தொடர்ந்து சரத்பவாரின் மனைவி பிரதீபாவும் அஜித்பவாரிடம் போனில் பேசினார். அதன் பிறகே அஜித்பவார் நேரடியாக பட்னாவிசை சந்தித்து தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார். பிறகு துணை முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நேற்றிரவு சரத்பவார் வீட்டுக்குச் சென்ற அவர், சரத்பவாரிடம் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு தவறான முடிவு எடுத்ததற்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு சரத்பவார் குடும்பத்தினரிடையே உணர்ச்சிமயமானது.
அஜித்பவாரை மன்னித்து சரத்பவார் ஏற்றுக் கொண்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்தது. இன்று காலை தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபைக்கு வந்த அவரை, சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, ‘வாங்கண்ணே... வாங்க’ என்று சொல்லி கண்ணீர் மல்க ஆரத் தழுவி வரவேற்றார். இதன்பின்னர் அஜித் பவார் சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து இருந்தார்.
பிறகு அவர் சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். அஜித்பவார் கட்சிக்கு திரும்ப வந்தது, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, கூட்டணி கட்சியினரும் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
இனி அஜித்பவாரின் எதிர்காலம் எப்படி பிரகாசிக்கும் என்பது போகப் போகத் தெரியும்.