பா.ஜ.க-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க நினைத்த அஜித் பவார், ஒரே நாளில் அந்த முடிவுக்கு வரவில்லை என்றும், அதற்குப் பின்னணியில் மனஸ்தாபங்களும், பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்தவராக கட்சிக்குள் அஜித் பவார் இருந்து வந்தார். 2009ல் துணை முதல்வர் பதவியை அடைந்த பின்னர் அஜித் பவாரின் இலக்கு மராட்டியத்தின் முதல்வர் பதவி என்பது மட்டும் தான். ஆனால் ஊழல் வழக்குகள் அவரை விட்டு வைக்கவில்லை. அரசியலில் தாண்டி குடும்ப பிரச்னைகளும் அஜித் பவார் பா.ஜ.க உடன் இணையக் காரணமாகி இருக்கிறது.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அஜித் பவாரின் மகனான பர்த் பவார் மாவல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் தான் 1967ம் ஆண்டு சரத் பவாரும், 1991ம் ஆண்டு அஜித் பவாரும், 2009ம் ஆண்டு சுப்ரியா சுலேவும் வெற்றி பெற்றனர். முதலில் பர்த் பவாருக்கு தேர்தலில் சீட் வழங்க சரத் பவாரும், சுப்ரியா சுலேவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அஜித் பவார் கடும் வாதத்திற்குப் பிறகே தனது மகனுக்கு சீட் பெற்றிருக்கிறார். ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் அந்த தோல்விக்கு சரத் பவார் தான் காரணம் என்று அஜித் பவார் மற்றும் குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள்.
அதே குடும்பத்தின் ரோஹித் ராஜேந்திர பவார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார். இவரது அரசியல் வளர்ச்சி அஜித் பவாருக்கும் அவரது மகனுக்கும் பிடிக்கவில்லை என்பதும் அஜித் பவார் பிரிந்து செல்ல ஒரு காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.கவுடன் அஜித் பவார் இணைந்தது பல கட்டங்களுக்குப் பின்னர் தான் எனத் தெரிய வருகிறது. கடந்த வெள்ளியன்று மதியம் அஜித் பவாரிடமிருந்து ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்புவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதேபோல பா.ஜ.க-வின் பட்னாவிஸ் தரப்பிலிருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 15 சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அதன் பின்னரே ஆளுநர் ஜனாதிபதிக்கு இதுகுறித்து தெரிவித்திருக்கிறார். சனிக்கிழமை காலை பதவி ஏற்க அழைப்பு வந்திருக்கிறது. அதற்கு முன்பாக, வெள்ளி மாலையே பா.ஜ.க மகாராஷ்டிரா தேர்தல் பொறுப்பாளர் பூபேந்திரா யாதவ் மும்பை வந்தது குறிப்பிடத்தக்கது.
சிவசேனாவுடன் பிரச்னை தொடங்கியது முதலே, தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பதை விட இரண்டு கட்சிகள் ஆட்சி அமைப்பது சாத்தியமானது என்று உணர்ந்து இருக்கிறார்கள். கடந்த 12ம் தேதி அஜித் பவார் ஆளுநரிடம் நேரம் கேட்டதற்கு காரணமே பா.ஜ.கவுடன் தொடர்பில் இருந்ததுதான் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்தை கடந்த வெள்ளி அன்று நடந்த நிலையில் கூட்டம் முடிவதற்குள் கிளம்பினார் அஜித் பவார். வழக்கறிஞரை பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் பட்னாவிஸை சந்தித்திருக்கிறார். அதன் பின்னர் தான் ஆட்சியமைப்பு உள்ளிட்ட எல்லா கூத்துகளும் அரங்கேறி இருக்கிறது.
உத்தவ் தாக்கரே மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்பதை நான்கு அறிந்த பின்னர் தான் அஜித் பவாரை தங்கள் பக்கம் கொண்டு வரும் முடிவுக்கு வந்திருக்கிறது பா.ஜ.க.
2019 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, கூட்டணி பேச்சுவார்தைகள் தொடங்கிய பின்னர் துணை முதல்வர் பதவியை ஜெயந்த் பட்டீலுக்கு வழங்க சரத் பவார் முடிவு எடுத்திருக்கிறார். அதேபோல, அஜித் பவார் யார் யாருக்கு அமைச்சர் பதவி என்ன துறை என்பது குறித்து சரத் பவாரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அதுகுறித்து அஜித் பவாருடன் சரத் பவார் விவாதிக்க மறுத்து விட்டதாகவும், அதன் காரணமாகவே இப்படியொரு முடிவை அஜித் பவார் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
- சி.ஜீவா பாரதி