மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள காளிதாஸ் கொலம்பகர் புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
ராஜினாமா கடிதத்தை அளிக்க மஹராஷ்டிரா ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார் தேவேந்திர பட்நாவிஸ்
ஆளுநரை மாலை 06.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் ராஜினாமா
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அரசியல் சாசனத்துக்கு எதிராக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்திருப்பதற்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது உச்ச நீதிமன்றம்.
பின்னர் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ''எங்களை எந்தளவுக்கு உடைக்க முயற்சிக்கிறார்களோ அந்தளவிற்கு அதிகமாக நாங்கள் ஒன்றுபடுவோம்.
நாங்கள் வெறும் 5 வருடத்திற்காக இங்கு வரவில்லை. இன்னும் பல வருடங்களுக்கு நாங்கள் மகாராஷ்டிராவை ஆட்சி செய்ய போகிறோம்'' எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கர்நாடகா, கோவா, மணிப்பூரில் பெரும்பான்மை இல்லாமல் பா.ஜ.க ஆட்சி அமைத்தார்கள்.
ஆனால், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்ல மகாராஷ்டிரா. பெரும்பான்மையை நிரூபிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது'' எனத் தெரிவித்தார்.
அதன்படி, மும்பை தனியார் ஓட்டலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 162 பேர் செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றினார்கள்.
அப்போது, 162 ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில், நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.
மகாராஷ்டிரா வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவை நாளை காலை 10.30க்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. பாஜகவிற்கு ஆதரவு வழங்குகிறேன் என கூறினால், அது கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியுமா? - சிவசேனா தரப்பு வாதம்!
அஜித் பவார் அளித்த ஆதரவு கடிதத்தை அரையும்குறையுமாக நம்பி பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைத்ததன் வாயிலாக ஜனநாயக மோசடி நடைபெற்றுள்ளது - சிவசேனா வாதம்!
நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.
- உச்சநீதிமன்றம்
"மகாராஷ்டிராவில் பா.ஜ.க அரசிற்கு 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது; ஆதரவுக் கடிதம் போலியானது என்று கூறுவதை ஏற்க முடியாது!"
- பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி
ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது; ஆளுநரை விரைவாக வேலை செய்ய அவசரப்படுத்த முடியாது.
- மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம்
ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
பரபரப்பான அரசியல் சூழலில் மிக முக்கியமான உத்தரவை சற்றுநேரத்தில் பிறப்பிக்கிறது, உச்சநீதிமன்றம்.
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சற்றுநேரத்தில் உத்தரவிடுகிறது உச்ச
நீதிமன்றம்.
ஆளுநரின் அழைப்பு கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!
பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆளுநர் அளித்த கடிதம், எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
எந்த அடிப்படையில் ஆளுநர் பதவி ஏற்பு நடத்த உத்தரவிட்டார். அதற்கான ஆவணங்களை நாளை காலை 10.30 மணிக்குள் மத்திய மாநில அரசுகள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.
“யாரோ எங்கிருந்தோ கொடுத்த உத்தரவின் பேரில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்பட்டுள்ளது” என கபில் சிபல் வாதம்.
மகாராஷ்டிராவில் இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கபில் சிபல் வாதம்.
மத்திய அமைச்சரவையின் பரிந்துரை இல்லாமல் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக உள்ளது என சிவசேனா தரப்பு வாதம்.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
இந்த வழக்கு விசாரணையில், சிவசேனா - காங். - என்சிபி சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி உள்ளனர். அதேபோல் மகாராஷ்டிரா அரசு சார்பாக கே.கே.வேணுகோபால் ஆஜராகி உள்ளனர். பா.ஜ.க சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகியுள்ளார்.
குதிரை பேரத்தை தடுக்கும் வகையில், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மூன்று கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் பட்னாவிஸுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று காலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன், பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஜனநாயகத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டதாக பலரும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, சிவசேனா - தேசியவாத காங். - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணி ஆட்சி அமைக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை முதலில் தனித்தனியே உருவாக்கினார்கள். அதன் பின்னர் மூன்று கட்சியின் முக்கிய தலைவர்களும் இணைந்து விவாதித்தனர்.
மராட்டிய மாநிலத்தில் அக்டோபர் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. பா.ஜ.க - சிவசேனா கூட்டாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாகவும் தேர்தலை சந்தித்தன. பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பா.ஜ.க-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட அதிகாரத்தில் சமபங்கீட்டில் இழுபறி தொடர்ந்தது. அதன் பின்னர் மாநில அரசியலில் நேரடி அரசியல் எதிரியான சரத் பவாருடன் பேச்சுவார்த்தை தொடங்கியது சிவசேனா. சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது.
மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்தார். மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவே நவம்பர் 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.