நாடுமுழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் முறையாக குடிநீர் கிடைக்க மத்திய அரசு ஜல்ஜீவன் என்ற திட்டத்தை தொடங்கி, அதற்காக மாநில தலைநகரங்களில், குழாய் நீரின் தரம் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு அதுதொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதற்கான அறிக்கையை இந்திய தர நிர்ணய பணியகம் சார்பில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்றைய தினம் வெளியிட்டார். அதில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வழங்கப்படும் குடிநீர் போதிய தரமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை 21 தலைநகரங்களில் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் குழாய்களின் நீர் மட்டும்தான் எந்த சுத்திகரிப்பும் இன்றி, தூய்மையான நிலையில் குடிநீர் கிடைப்பதாக தெரிவித்துள்ளன.
ஆனால், அதற்கு நேர்மாறாக டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற 13 மாநில தலைநகரங்களின் குழாய்களில் இருந்து கிடைக்கும் குடிநீர் நிர்ணயிக்கப்பட்ட 11 வகையான சோதனையில் தேர்ச்சியடைவில்லை என்றும், நீரின் மணம், குளோரைடு, புளுரைடு, அமோனியா போன்று ரசாயனங்களின் அளவுகள் குறித்த பரிசோதனைகளில், நீர் தரமின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் 10 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட குழாய் நீரின் மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட தரக்கட்டுப்பாடு அளவீடுகளை தாண்டியுள்ளதாகவும் அதனால் அந்த குடிநீர் குடிப்பதற்கு தரமின்றி இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் 21 நகரங்களில் சென்னைக்கு 13-வது இடம் கிடைத்துள்ளது.
மேலும் குழாய் நீர்மாதிரிகளின் ஆய்வறிக்கை முடிவுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பி நீரின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கூறவுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவித்துள்ளது.