தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்த சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து நாட்களுக்கு ஒருமுறை, மிகக் குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் 90% பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. மாநில அரசு தண்ணீர் பற்றாக்குறையைச் சரி செய்யப் போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை எனப் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தண்ணீர் இல்லாததால் கழிவறைகளை நிர்வாகம் பூட்டி விட்டுச் சென்றதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்குத் தண்ணீர் இல்லாத நிலை உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் மருத்துவமனைக்குத் தேவையான அளவிற்குக் குடிநீர் விநியோகிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் நோயாளிகள் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். தண்ணீர் இல்லாத சூழலில் குடிக்கும் நீரைக் காசுக் கொடுத்து வாங்கும் அவல நிலைக்குச் சென்றுள்ளார்.
மேலும் ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடிக்க 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அங்குச் சிகிச்சை பெறும் ஒரு குடும்பத்தினர் நாள் ஒன்றுக்கு ரூ 200 முதல் ரூ 300 வரை குடிநீர்க்காகச் செலவு செய்வதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பணம் கட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத ஏழை மக்களே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களால் தினம் 300 ரூபாய் குடிநீர்க்காக மட்டும் செலவு செய்வது பெரும் வேதனைக்குரியதே, மேலும் மருத்துவமனையில் சிகிச்சை இலவசம், ஆனால் குடிக்கும் நீர் பணம் என்பது வருந்தலாக்கவேண்டிய விசயமாகப் பார்க்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகின்றர்.