நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், கடந்த மாதம் 20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது.
அதன் பிறகு, 5 முறை சந்திரயானின் சுற்று வட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதனையடுத்து, செப்.,2ம் தேதி சந்திரயான் விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் நிலவின் மேற்பரப்பை நோக்க பயணிக்கத் தொடங்கியது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து லேண்டரின் இயக்க பணிகளை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். நிலவில் தரையிறங்குவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டரின் நிலை என்ன ஆனது என்ற தகவலும் இல்லை. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், செயற்கைக் கோள்களை சுமந்து கொண்டு நிலவை சுற்றி தகவல் சேகரித்து வரும், சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் உதவியோடு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருப்பதாவது ”சந்திரயான் -2 ஆர்பிட்டர் அனுப்பிய தெர்மல் இமேஜ்கள் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டர் கண்டறியப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் தகவல் தொடர்பு பெற தொடர்ந்து முயற்சிப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.