அசாமில் முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், சட்டவிரோதமாக வசிப்பதாகவும், வாக்குரிமை உள்ளிட்ட பல சலுகைகளை அனுபவித்து வருவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, அங்கு சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் 40 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டிருந்தன.
அந்த வரைவு அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறு மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது. அசாமில் வசிக்கும் பலரும், முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, பெயர்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி 3 கோடியே 11 லட்சத்து 21ஆயிரம் பேர் அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வ இந்திய குடிமக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 19 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டு இருந்தன.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது குடும்பத்தினரின் பெயர்களும் விடுபட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவரின் குடும்பத்தினரே இந்தியக் குடிமக்கள் இல்லையா எனக் கேள்வி எழுந்துள்ளது.
அசாம் மாநிலத்தின் கல்வித் துறையில் பணியாற்றிய அப்துஸ் சுபான் என்பவர் ஆகஸ்ட் 17ம் தேதி உயிரிழந்தார். அவரது மகன் ஜுபைர் ஹூசைன், அரிஃபுல், யாஸ்மீன் ஆகியோரது பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால், அவரது சகோதரரான ஃபைசல் மற்றும் சகோதரி சல்மா ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இப்படி, மாநிலம் முழுக்கவே பல குடும்பங்களில் ஒருசிலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. குடும்பத்தில் தந்தை பெயர் இருந்தால் மகன் பெயர் இடம்பெறாதது, மகள் பெயர் இருந்தும், தாய் பெயர் இடம்பெறாதது என பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பல்வேறு புகார்கள் கிளம்பியுள்ளன.