சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சிதம்பரம் வழக்கில் கபில் சிபில் சிறப்பாக வாதாடினார். அரசு ஒரு வழக்கை எப்படி எல்லாம் ஜோடித்துள்ளது. எஃப்.ஐ.ஆரில் இடம்பெறாதவரிடம் சி.பி.ஐ. கேள்விகளை தயார் செய்யாமலே கைது செய்ய முயற்சிக்கிறது. அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும்.
இந்த விவகாரத்தில் தி.மு.க மவுனம் காக்கவில்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அழகான முறையில் சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் தொண்டன் பேசுவது போல் தி.மு.க.வும் பேசமுடியுமா? தி.மு.க - காங்கிரஸ் இடையே நல்ல புரிதல் உள்ளது. இதில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை.
தமிழகத்திற்கு யார் அவமானம், தலைக்குனிவு என உலகத்திற்கே தெரியும். அ.தி.மு.க அமைச்சர்கள் போல் பொதுவாழ்க்கையில் தாழ்மையடைந்தவர்கள் வேறு எவரும் கிடையாது. சி.பி.ஐ விசாரணைக்கும் வழக்கிற்கும் உட்பட்டு ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் மற்றவர்களைக் குறை சொல்வது தவறானது.
இந்தியாவில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திக் காட்டியவர் சிதம்பரம். மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கியவர். இந்தியாவில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தவர். இந்தியாவில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர். சிதம்பரம் எப்போதும் பெருமைக்குரியவராகத் தான் இருந்துள்ளார். குற்றம்சாட்டப்படுவதாலேயே குற்றவாளியாக முடியாது.
பா.ஜ.க.வின் தவறான கொள்கைகளை பேராண்மையுடன் அரசுக்கு எதிராகப் பேசுவதால் சிதம்பரம் குறி வைக்கப்படுகிறார். சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக உள்ளது. எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் தவிடு பொடியாக்குவோம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் வெளிநாட்டு மூலதனத்தைப் பெற்று வருவது அமைச்சரின் முடிவு அல்ல. 6 தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு, ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோரும் இருப்பார்கள். அந்த உயர்ந்த குழு அங்கீகரித்ததற்கு நிதியமைச்சர் கையெழுத்து போட்டு உள்ளார். இதனால் எஃப்.ஐ.ஆரில் நிதியமைச்சரை சேர்த்தால் அரசு அதிகாரிகள் குழுவையும் சேர்க்க வேண்டும். ஆனால் இதை பா.ஜ.க செய்யாது. இதனால் வழக்கு நிற்காது.
சிதம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்து அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும். இதன் முலம் காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். அரசு முற்றிலும் தவறான நிலையை எடுத்துள்ளது. இது தர்மத்திற்கும் நீதிக்கும் புறம்பானது. அவர்களின் திட்டம் வெற்றி பெறாது” இவ்வாறு கூறினார்.