தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தென் இந்தியாவில் கேரளம், கர்நாடகம், தமிழகம் என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாத தொடக்கத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குடகு, மங்களூரு, மடிகெரி, சிவமோகா, மைசூர், உத்தர கர்நாடகா என பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர்.
இன்னும், மீட்புப்பணிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுக்கும் பணியிலும், தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு இருக்கையில், நீர் நிலைகளில் இருந்து பல்வேறு ஊர்வன உயிரினங்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கிராமங்களுக்குள் புகுவதால் இதனாலும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அப்படி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று வீட்டுக் கூரையின் மேல் சிக்கியிருக்கிறது. பெல்காம் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வீடுகள் மூழ்கும் அளவுக்கு மழை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.
வீட்டின் மேல் முதலை உள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.