ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் 35 ஆயிரம் ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், மாணவர்கள் விடுதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்பதுல்லா இல்லத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா, “காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் கடும் விளைவுகளை மத்திய அரசு சந்திக்கும் என்றும், காஷ்மீரில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயல்களில் இந்தியா, பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் கான்ப்ரன்ஸ் கட்சி நிர்வாகி சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமி சற்று முன்பு கைது செய்யபட்டுள்ளனார்.
வீட்டுச் சிறை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களைப் போன்ற பிரதிநிதிகளை எப்படி வீட்டுச் சிறையில் வைக்க முடியும்? ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்படுவதை இந்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவே விழித்தெழு" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, மாநில நலனில் உண்மையான அக்கறையில்லாதவர்கள் தான் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்று குறிப்பிடுட்ள்ளார். இந்த சூழ்நிலையிலும், தனது நம்பிக்கையை கைவிட வில்லை என்றும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உச்சகட்ட பதற்றம் நிலவி வருகின்ற சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும்வரை 144 தடை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் அனைத்தும் நிறுத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தில் மாற்றம் ஏதும் செய்யப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராணுவ படைகளை குவித்து, அம்மாநிலத்தின் நலனுக்கும், தேசத்தின் நலனுக்கும் தீக்குவிளைவிக்கும் விதத்தில் அரசியல் சாகசத்தில் ஈடுபட முயற்சிக்கிறது என மோடி அரசை அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.