மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரிலிருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியது. இந்த ரயில், பத்லாப்பூர்-வாங்கனி ரயில் நிலையம் இடையே தற்போது நிற்கிறது. இந்த ரயிலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 700 பயணிகள் பயணித்துள்ளனர்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து யாரும் இறங்கவேண்டாம் என கேட்டுக்கொண்டனர். ரயிலில் உள்ளவர்களை வான்வழியாக மீட்கலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டனர். அனால், மோசமான வானிலை காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக 3 படகுகளில் பேரிடர் மீட்பு படையினர் அந்த இடம் நோக்கி விரைந்தனர். அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
மஹாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய 700 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தகவல் அளித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், பால்கர், தானே, மும்பை, ரெய்காட், ரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.