ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மற்ற மாநில அரசுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பல்வேறு அசத்தலான, அதிரடியான உத்தரவுகளை அறிவித்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு போலீசாருக்கும் சுழற்சி முறையில் கட்டாய வார விடுமுறை, சுகாதாரத்துறையில் உள்ள ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10,000 ஆக சம்பள உயர்வு, ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து வழங்கப்படுதல் என்பவை உள்ளிட்ட பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.
இந்த வகையில், தனது பாதயாத்திரையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படி, ஆந்திராவில் தனியார் தொழில், கூட்டுத்தொழில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் 75 சதவிகித ஆந்திர மக்களே பணியமர்த்தப்பட வேண்டும் என நேற்று (ஜூலை 22) நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில் வேலைவாய்ப்பு சட்டம் 2019 என்ற புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
இந்த சட்டம் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும், தேவையான பணியாளர்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால் அவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பயிற்சி அளித்து பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும், 3 மாதங்களுக்கு ஒருமுறை பணியமர்த்தப்பட்ட ஆட்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் மாநில மக்களின் வேலை வாய்ப்புக்காக ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த சட்டத்தை மக்கள் அனைவரும் வரவேற்றும் பாராட்டியும் வருகின்றனர்.