பதவியில் இருந்த ஐந்தாண்டு காலமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்து வந்த பிரதமர் மோடி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று அமித்ஷாவுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
மோடியும், அமித்ஷாவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார் ராகுல் காந்தி. பேசிக்கொண்டிருந்த ராகுல், தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒளிபரப்பாவதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கடைசியில் மோடி செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டார் என கைதட்டி ஆரவாரம் செய்தார்.
பின்னர், மோடியின் பேச்சைக் கேட்டுக்கொண்டே அதற்கு நேரடியாக பதில் அளித்தார் ராகுல். மோடியிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளை அமித்ஷா பதிலளிப்பார் என அவரிடம் திருப்பிவிட்டார் மோடி. இது சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளானது.
மேலும், “வாழ்த்துகள் மோடிஜி... அடுத்த முறை அமித்ஷா உங்களையும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதிப்பார்” என ட்விட்டரில் கிண்டலாக தெரிவித்துள்ளார் ராகுல்.