மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், அமேதி தொகுதியில் வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், அமேதி தொகுதி வாக்காளர்கள் தன்னை மீண்டும் தேர்வு செய்யவேண்டும் எனக்கோரி, அமேதி தொகுதி மக்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் ராகுல் காந்தி.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“அமேதிதான் எனது குடும்பம். எனது அமேதி குடும்பம்தான், என்னை உண்மையின் பக்கம் நிற்கவும், ஏழைகளின் வேதனையைக் காதுகொடுத்துக் கேட்கவும், மக்களின் குரல்களை அவர்கள் ஒடுக்குவதை எதிர்க்கவும், அனைவருக்கும் நீதிகிடைக்க உறுதியேற்கவும் எனக்கு வலிமையைக் கொடுக்கிறது.
நீங்கள் அளித்த அன்பின் அடிப்படையில், நாட்டின் வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்கு முதல் மேற்கு வரையும் ஒன்றுபடுத்த முயன்று வருகிறேன். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததும், அமேதி தொகுதியில் பா.ஜ.க அரசால் முடக்கப்பட்ட திட்டங்களை முழு வேகத்துடன் செயல்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.
ஒருபுறம், அமேதியிலிருந்து எழும் குரல், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், சிறு வணிகர்களுக்காக உழைக்க வேண்டும் எனச் சொல்கிறது. மறுபுறம் பா.ஜ.க தரப்பிலிருந்து எழும் குரல், 15 - 20 தொழிலதிபர்களின் கைகளில் அரசு இருக்க வேண்டும் என சொல்கிறது. அமேதியில் எழும் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க-வின் அநீதிக்கு எதிராகவும், உண்மைக்கு ஆதரவாகவும் நிற்கிறார்கள் நாட்டு மக்கள். இங்கு பா.ஜ.க பொய்யை உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறது. வாக்காளர்களைக் கவர அதிகளவு பணத்தைப் பயன்படுத்துகிறது. அமேதி மக்கள் அவர்களது சதியில் விழ மாட்டார்கள் என நம்புகிறேன்.” என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.