தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
ஆனால், அ.தி.மு.கவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, பழனி, மதுரை, கோவை, நீலகிரி, எடப்பாடி என பல தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தாலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த மாரண்டஅள்ளி அருகே அமானிமல்லாபுரம், அத்திமுட்லு, சாமனூர், பஞ்சப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக அ.தி.மு.கவினர் வீடு வீடாகச் சென்று வேட்டி, சேலை, சுடிதார், பேண்ட் ஆகியவற்றை தொகுப்பாக ஒரு பையில் வைத்து விநியோகம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தி.மு.கவினர் கூறுகையில்,"மாரண்டஅள்ளி அருகே அ.தி.மு.க-வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக வேட்டி, சேலை, சுடிதார், பேண்ட் அடங்கிய தொகுப்பை விநியோகம் செய்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் படம் பொறிக்கப்பட்ட பையில் வைத்து விநியோகம் செய்கின்றனர். அமைச்சர் பெயர் அ.தி.மு.க கட்சியின் நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலக்கோடு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.