18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
அப்போது பேசிய அகிலேஷ், "4 கட்ட மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜகவின் வெற்றி வாய்ப்பு மளமளவென சரிந்து விட்டது. பாஜகவுக்கு பிரிவு உபசார விழா நடத்த மக்கள் தயாராகி விட்டனர்.
விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்க போவதாக கூறிய ஒன்றிய பாஜக அரசு, விவசாயிகளுக்கு பல துன்பங்களை அளித்துள்ளார். கொரோனா காலங்களில் மக்களுக்காக மக்களிடமே நிதிகளை பெற்றுக்கொண்டு அதனை தனக்கான விளம்பரங்களுக்காக பயன்படுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. கூகுள் விளம்பரங்களுக்கு மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.