நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதோடு தேர்தல் ஆணையம் தேர்தல் பிரசாரத்தில் பல நிபந்தனைகளை, நடத்தை விதிகளை கூறியுள்ளது. அதனை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
ஆனால் பாஜகவினர் பலரும் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் மீரட்டில் பாஜக வேட்பாளராக பிரபல நடிகரான அருண் கோவில் (Arun Govil) அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அங்கே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழலில் தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் இராமர் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார். இராமர் புகைப்படத்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் மீது தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது, பண பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்கல், மதம், சாதி சார்ந்து பிரசாரம் செய்ய தடை உள்ளிட்ட பல விதிகள் இருக்கும் நிலையில், பாஜக வேட்பாளர் இராமர் புகைப்படத்தை வைத்து பிரசாரம் மேற்கொண்டது கண்டனங்களை எழுப்பியுள்ளது.
கடந்த 1987-1988 வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இராமாயணம்' தொடரில் இவர் இராமராக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 'லவ குசா' தொடரிலும் இவர் இராமராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.