தி.மு.க. தலைவருக்கு ஒரு தொண்டன் கடிதம் என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை வஞ்சகமாக தன்னுடைய காழ்ப்புணர்ச்சியைக் காட்டியிருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளோடு நிகழ்கால செயல்பாடுகளை ஒப்பிட்டு ஆலோசனை என்ற பெயரில் தன் வயிற்றெரிச்சலை வெளிக்காட்டியிருப்பதாகவே தோன்றுகிறது. மாறி வரும் கால சூழ்நிலைகளுக்கும் அறிவியல் முன்னேற்றங்களுக்கும் மக்களின் மனோபாவங்களுக்கும் தகுந்தவாறு தன்னையும் ஒரு இயக்கம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமென்பதே இயற்கையின் நியதி என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது என்பது மட்டுமல்ல, எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதே உண்மை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தன் பெருமைகளை மறந்து போயிருந்த ஒரு இனத்தைத் தட்டியெழுப்பி மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக நூறாண்டுகளுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருப்பது திராவிட இயக்கம்.
திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் தொடங்கி வைத்த சீர்த்திருத்தப் பாதையிலே தொடர்ந்து செயல்பட்டு, ஒரு சமூக மறுமலர்ச்சியை உருவாக்கியவர் இந்நாட்டு இங்கர்சால் தென்னாட்டு பெர்னார்ட்ஷா விந்தியத்தின் தெற்கே தமிழினத்தினை தலைநிமிரச் செய்த சீராளன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். வல்லூறுகள் வானத்திலே வட்டமிடும் வேளையிலே சேய்க் கிளிகளைத் தவிக்க விட்டுத் தாய்க் கிளியைக் கொன்றது போல் காலம் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பறித்துக் கொண்டதற்குப் பின்னால், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்று தன் பன்முகத் தன்மைவாய்ந்த ஆற்றல்களால் தமிழகத்தை ஏற்றம் பெறச் செய்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். தாய் மொழியைக் காக்க, தமிழினத்தின் பெருமைகளைப் பாதுகாத்திட, பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்பிட, சுயமரியாதை சிந்தனைகள் ஓங்கிட, உரிமைகள் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்காக கல்வி வேலைவாய்ப்பு அரசியல் பொருளாதாரம் போன்றவற்றில் சமூக நீதியை நிலைநாட்டிட பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருமைக்குரிய நம் தலைவர் கலைஞர் போன்றவர்களெல்லாம் வகுத்துத் தந்தப் பாதையிலே சற்றும் தடம் புரளாமல் திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறைத் தலைவராகக் கம்பீரமாக செயல்பட்டு வருபவர்தான் பாசத்திற்குரிய கழகத் தலைவர் நம் ஆருயிர் அண்ணன் தளபதி அவர்கள்.
கடந்த 200 ஆண்டுகளில் உருவான அறிவியல் வளர்ச்சியைக் காட்டிலும் கடந்த 20 ஆண்டுகளில் உருவான அறிவியல் வளர்ச்சி என்பது அசுர வேகம் கொண்டதாக விளங்குகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கிடும் உண்மையாகும். அதேபோல் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனைகளும் குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் மனோபாவமும் கடந்த 20 ஆண்டுகளில் முற்றிலும் மாறுபட்டு விளங்குகிறது என்பதும் வெள்ளிடை மலையென விளங்கிடும் உண்மையாகும். மக்களின் மனோபாவம் மாறியிருப்பது மட்டுமல்லாமல் மக்கள் தொகையும் வெகுவாகப் பெருகியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு இயக்கமும் அதன் தலைமையும் தன்செயல்பாடுகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது என்பது இயல்பானது மட்டுமல்ல; மிக அவசியமானதும் அவசரமானதும் கூடத்தான். அந்த வகையில், கொண்ட கொள்கைகளிலிருந்து சற்றும் பிறழாமல் உறுதியோடு வீறு நடைபோடும் கழகத் தலைவர் அவர்கள் அறிவியல் வளர்ச்சியை உபயோகித்துப் பழமை மாறாமல் புதுமையைக் கையாண்டு செயல்பட்டு வருகிறார். இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கானத் தொண்டர்கள் மட்டுமன்றித் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டிருப்பதோடு அதைப் போற்றவும் செய்கிறார்கள்.
முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்ற பொய்களையும் புளுகு மூட்டைகளையும் பரப்பி 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பை எதிரிகள் தட்டிப் பறித்ததற்குப் பின்பும் தோல்வியைக் கண்டுத் துவண்டு விடாமல் "நமக்கு நாமே" என்னும் ஒரு புதுமையான மற்றும் புரட்சிகரமான பயணத்திட்டத்தை வகுத்து தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்றார் தளபதி. அத்துடன் பட்டித் தொட்டிகளில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களையும், மகளிர், மாணவர்கள், தொழிலாளத் தோழர்கள், நெசவாளர்கள், விவசாயப் பெருமக்கள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து அவர்தம் குறைகளைக் கேட்டறிந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு திரட்டி, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழகத்தை வெற்றி முகட்டிற்கு இட்டுச் சென்றவர் கழகத் தலைவர் நம் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்கள். ஆனால், வெறும் 1.1 சதவிகிதம் என்னும் நூலிழையிலான சொற்ப வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டோம். அதனால் கடந்த பத்து ஆண்டுகளாக இருமுறை தொடர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பினைப் பெற்ற அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தினாலும் ஊழல் கொள்ளைகளாலும் நிர்வாகத் திறனின்மைக் காரணமாகவும் தமிழகத்தைப் பல்வேறு துறைகளிலும் பின்னுக்குத் தள்ளியதோடு தமிழகத்தையே இருட்டினில் மூழ்க வைத்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் இருண்ட தமிழகத்தை மீட்டு ஒரு விடியலை நோக்கி அழைத்துச் செல்லும் புதிய பூபாளமாக கழகத் தலைவர் அவர்களை நம்பிக்கையோடு எதிர் நோக்கியிருக்கிறார்கள் என்பதை, "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்னும் பயணத்தில் என்னைப் போன்றவர்கள் நேரிடையாக காண முடிந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவும், ஏன் உலக நாடுகள் அனைத்துமே முடங்கிப் போயிருந்த நேரத்திலும் கூட "ஒன்றிணைவோம் வா" என்ற திட்டத்தின் மூலம் கழகத் தோழர்களைக் கொண்டு மக்களின் துயர்துடைக்கச் செய்தவர் கழகத் தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்கள். உலகளாவிய சாதனை படைத்திடும் வகையில் காணொலிக் காட்சிகளின் மூலமாக கழகத்தோழர்கள் அனைவரோடும் நேரடித் தொடர்பு கொண்டு உரையாடியதோடு மட்டுமன்றி, "தமிழகம் மீட்போம்" என்னும் முழக்கத்தோடு பொதுக் கூட்டங்களையே நடத்திக் காட்டிய பெருமை நம் தலைவரைச் சாரும். அந்த வகையிலேதான் தற்போது "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்னும் தலைப்பு கொண்ட பயணத் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார். அவ்வாறு அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றையெல்லாம் ஒரு பெட்டகத்தில் வைத்துப் பூட்டித் தன் கைகளாலேயே சீல் வைத்துக் கொண்டு செல்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி சென்னை கோபாலபுரம் தலைவர் கலைஞர் அவர்களின் இல்லத்தில் வைத்து தமிழக ஊடக நிருபர்களையெல்லாம் அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த பயணத்திட்டத்தை அறிவித்ததோடு "சொன்னதை செய்வோம் -செய்வதைத்தான் சொல்வோம்" என்னும் அடிப்படையில் அவ்வாறு பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது, தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 100 நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்னும் உறுதி மொழியினையும் அளித்தார். அந்த அடிப்படையிலே தான் கழகத் தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்கள் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்காங்கே மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தொடர்ந்து மக்களைச் சந்தித்து வருகிறார். இதற்காக பிரத்தியேகமானப் படிவங்கள் வரிசை எண்களோடு அச்சடிக்கப்பட்டு அவற்றில் மக்களின் கோரிக்கை மனுக்களை இணைத்து அதற்கான ஒப்புகைச் சீட்டையும் அவர்களுக்கு அளித்து, ஏதோ அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல இல்லாமல் முறையாகவும் தெளிவாகவும் செயல்படுத்தப்படுகின்ற இத்திட்டம் அனைவரின் பேராதரவையும் பாராட்டுக்களையும் பெற்றிருப்பதோடு மக்களிடையே பெரிய எழுச்சியையும் உருவாக்கியிருக்கிறது. அதைப் பொறுத்துக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ மனமில்லாதவர்கள்தான் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். அவ்வளவுதான்.
அண்மையில் நாகை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், கிருஸ்த்துவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தினர் போன்ற பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கின்ற வாய்ப்பு "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்னும் பயணத் திட்டத்தின் மூலம் எனக்கு கிடைக்கப் பெற்றது. "ஸ்டாலின்தான் வாராரு! விடியல் தரப்போறாரு!!" என்று மிகுந்த நம்பிக்கையோடும் பெருத்த எதிர்பார்ப்புடனும் அனைத்துத் தரப்பு மக்களும் திகழ்கின்ற எழுச்சிமிகுந்த காட்சிகளை அப்பொழுது காண முடிந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாத நிலையில் அறுவடை செய்யப்படாத நெல் மணிகளெல்லாம் வயலிலேயே விழுந்து முளைத்துவிட்ட நிலையில் பரிதவிப்பிற்கும் பெருத்த கவலைக்கும் உள்ளாகியிருக்கும் விவசாயப் பெருமக்கள் தாங்கள் படும் அவலங்களை விவரித்து, கழகத் தலைவரிடம் போய் சொல்லுங்கள்; அவர் ஆட்சிக்கு வந்தால்தான் எங்கள் குறைகளெல்லாம் தீரும் என்று நம்பிக்கையோடு சொன்னார்கள். அதேபோல கற்புக்கரசியாம் கண்ணகி வாழ்ந்த பூம்புகார் நகரிலே பண்டைத் தமிழினத்தின் பண்பாட்டுப் பெருமைகளையெல்லாம் எடுத்துக்காட்டும் வகையிலே தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட சித்திரச் சோலைகளும் செந்தாமரைத் தடாகங்கள் போன்ற நீச்சல் குளங்களும் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த கண்கவர் கவின் மண்டபங்களும் நிறைந்த நினைவுச் சின்னங்கள் பாழடைந்து புதர் மண்டியுள்ள அவல நிலையைக் காட்டிய அவ்வூர் மக்கள் எதிர்பார்த்திருப்பது கழகத்தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்களைத்தான்.
தங்களுடைய வாழ்வாதாரங்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகள், தூண்டில் வளைவுகள், முகத்துவாரப் பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் சிறிய மோட்டார் படகுகளுக்கு அனுமதி மற்றும் தாங்கள் வாழுமிடங்களுக்கு வீட்டு வசதி மனைப் பட்டா போன்றவைகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பூம்புகார், கொள்ளிடம், பழையாறை போன்ற பகுதிகளில் வாழ்கின்ற மீனவ சமுதாயத்தினரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது கழகத் தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்கள் தான். பல்வேறு வியாபாரங்களையும் தொழில்களையும் செய்து கொண்டு மத நல்லிணக்கத்தோடு அனைத்து சமுதாயத்தினருடனும் சகோதர பாசத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த கிருஸ்துவப் பெருமக்களும் இஸ்லாமியப் பெருமக்களும் தங்கள் காவல் அரணாக நம்பியிருப்பது கழகத்தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்களைத்தான். கும்பகோணம் அருகிலுள்ள பட்டவர்த்தியில் தலைவர் கலைஞர் அவர்களால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட சர்க்கரை ஆலை, தேசிய அளவில் உற்பத்திக்கான பல்வேறு விருதுகளைப் பெற்று விளங்கிய நிலையில் அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் மூடப்பட்டிருப்பதையும், அதனால் சுமார் 1200 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும், அந்த சர்க்கரை ஆலையை நம்பி கரும்பை விளைவிக்கும் சுமார் 57,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் அவ்வூர் மக்கள் ஏக்கத்தோடு எடுத்துச் சொன்னதோடு, அடுத்து கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைவது உறுதி என்றும் அப்பொழுது தங்கள் கவலைகள் தீரும் என்றும் பெரும் நம்பிக்கையோடும் எழுச்சியோடு எடுத்துரைத்தார்கள்.
அதேபோல மணல்மேடு பகுதியில் மூடப்பட்டுள்ள பஞ்சாலை தொழிலாளர்களும், வாஞ்சூரில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் மிகுந்த நம்பிக்கையோடு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களை எதிர் நோக்கியிருக்கிறார்கள். இவ்வாறு தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களும் மத்தியிலே ஆட்சி செய்து கொண்டிருக்கிற எதேச்சதிகார பா.ஜ.க. ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளாலும் தமிழகத்திலே ஆட்சி செய்து கொண்டிருக்கிற செயல் திறனற்ற அடிமை அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் கையாலாகாத செயல்பாடுகளாலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழக மக்களின் அவல நிலையைப் போக்கி இருண்ட தமிழகத்தில் விடியலை உருவாக்கிட அயராது உழைத்துக் கொண்டிருக்கிற ஒரே தலைவர் மரியாதைக்குரிய கழகத் தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்கள் ஒருவர் தான். "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்று நம் தலைவரின் குரலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுமந்து சென்ற என் போன்றவர்கள், ஒரே விதமான அலை வீசுவதைப் போன்ற மக்களின் எழுச்சியையும் எதிர்பார்ப்பையும் கண்ட பின்பு "தலைவரை நோக்கி மக்களின் குரல்" என்று மக்களுடைய ஆர்வத்தையும் பேராதரவையும் "இனி எங்கள் விடியலே அவர் தான் என்னும் மக்களின் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கலந்த முழக்கத்தையும் சுமந்து வந்து தலைவரிடம் தெரிவிக்க வேண்டியவர்களாக மாறிவிட்டோம் என்றால் அது மிகையாகாது. தமிழக மக்களுக்கு குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கும், பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், நெசவாளிகளுக்கும், வர்த்தகர்களுக்கும், தமிழக பூர்வகுடிகளான நெய்தல் நிலத்தில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்கும், சிறுபான்மை சமுதாயத்தினரான கிருஸ்துவ மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு அரசியல் பொருளாதாரம் மற்றும் தொழில் தளங்களில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் வழங்குவதும், ஊழலை ஒழித்துத் தூய்மையான நிர்வாகத்தைத் தருவதுமே தன்னுடைய தலையாய குறிக்கோள் என்று சூளுரைத்து கழகத்தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்கள் அயராது உழைத்து வருகிறார்.
கழகத் தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்கள், மாறியிருக்கின்ற சமூக அறிவியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன் செயல்பாடுகளைக் கச்சிதமாக வடிவமைத்துக் கொண்டு, பேரறிஞர் அண்ணா அவர்களின் "கடமை, கண்ணியம் கட்டுப்பாடு" என்னும் பெரு முழக்கங்களின் அடிப்படையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தை இராணுவக் கட்டுப்பாட்டோடு வழி நடத்தி வருகிறார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்களிடையே உருவாகியிருக்கும் எழுச்சியையும் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் மீது மக்கள் காட்டிவரும் பேராதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் "டெக்னாலஜியால் மட்டுமே கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முடியும் என்று நினைப்பது வீண் கனவு" என்று தங்கள் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கழகத் தலைவர் ஆரூயிர் அண்ணன் தளபதி அவர்கள் டெக்னாலஜியால் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தலாம் என்று நினைத்து செயல்படவில்லை; மாறாக, திராவிட இயக்கத்தின் சமுகநீதிக் கொள்கைகளால், மக்கள் மீது தான் வைத்திருக்கும் பற்றார்வத்தால், மக்கள் தன் மீது வைத்திருக்கும் பேராதரவால், அயராத தன் உழைப்பால், கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் கடமையாற்றுகின்ற கழகச் செயல் வீரர்களின் செயல்பாடுகளால் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்கு டெக்னாலஜியைப் பயன்படுத்திக் கொள்கிறாரே தவிர வேறல்ல. கழகத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்த வேண்டுமென அவர் நினைப்பது தன்னலத்திற்காக அல்ல; மாறாக மக்கள் நலனுக்காக, அவர் தம் வாழ்வினை தூய்மையான நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகத்தால் மேம்படுத்துவதற்காக மட்டுமே. இருண்ட தமிழகத்தை அவர்தான் மீட்டெடுக்க வேண்டும் என்பதும், தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை அவர்தான் தர வேண்டும் என்பதும், தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலே அடுத்து அவர்தான் அமர வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாகும்.