முத்தமிழறிஞர் கலைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கல்லக்குடி ரயில் நிலையத்தைப் பார்வையிட்டார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க முன்னணியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களிடையே கலந்துரையாடி வருகின்றனர். அந்தவகையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று திருச்சி மாவட்டம் லால்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றக்கோரி முத்தமிழறிஞர் கலைஞர், கல்லக்குடி ரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து மறியல் செய்த இடங்களையும் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின். அப்போது தி.மு.க எம்.எல்.ஏக்கள் சவுந்தரபாண்டியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எனது தாத்தா கலைஞர் போராட்டம் நடத்திய கல்லக்குடி ரயில் நிலையத்தை முதன்முறையாக பார்க்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தமிழகத்தில் இன்னும் இந்தி திணிப்பு தொடர்கிறது. நாங்கள் இந்தி மொழிக்கு எதிரி அல்ல; இந்தி திணிப்புக்கு தான் எதிரி” என்று தெரிவித்தார்.
மேலும், கல்லக்குடியில் உள்ள தி.மு.கழக முன்னோடிகள் வீரமணி - கமலம் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அவரை அன்போடு வரவேற்று கலைஞரின் கல்லக்குடி போராட்ட நினைவுகளை அப்பகுதி பொதுமக்கள் பகிர்ந்துகொண்டனர்.
பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், “'அன்னைத் தமிழை காக்க- ஆதிக்க இந்தியை ஒழிக்க' தண்டவாளத்தில் தலை வைத்து முத்தமிழறிஞர் போரிட்ட கல்லக்குடி ரயில் நிலையத்துக்கு சென்றேன். தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, எந்த வடிவத்தில் இந்தி திணிப்பு வந்தாலும் தமிழகம் ஏற்காது; கழகம் தடுக்குமென்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.