அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியின் போது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்படும் 18% இடஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றினார்.
இது தொடர்பாக அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பாக கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். அதன் விவரம் பின்வருமாறு:
“இன்று என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். ஆம், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்திலே நிறைவேறுகின்ற நாள். இந்த நாளில் சட்டசபை வந்து இந்த மசோதாவை நானே முன்மொழிந்து நிறைவேற்றித் தரவேண்டும் என எண்ணியிருந்தேன். சட்டசபைக்கு வருவதாக இருந்தது. ஆனால், டெல்லி டாக்டரும், சென்னை டாக்டர் நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். எனினும் இன்று காலையில் நானே அருந்ததியர் மசோதாவினை அவையிலே முன்மொழிவதற்கான உரையை என் கைப்பட எழுதி அவையிலே அதனை படிக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து எனக்கு பதிலாக இந்த மசோதாவினை அவரை முன்மொழியுமாறு கேட்டுக்கொண்டேன்.
கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு. இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது. தமிழ்த்தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது. அறிவியக்கம், ஆன்மிகம், நாத்தீகம் மற்றும் ஆத்திகம் இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வையும் நன் மனித நேயமும் வளர்த்திடுவோம். அருந்ததியினருக்கான இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற எனது உள்ளத்தின் அடித்தளத்தில் நீண்ட பல ஆண்டுகளாக இருந்து அதனை சட்டமாக நிறைவேற்றுகின்ற நேரம் இப்போதுதான் வந்துள்ளது. இந்த சட்டத்தின் காரணமாக சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் நாளை, நாளை மறுநாள் அவர்களும் வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்று தான் என்னுடைய உள்ள வேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும்.
இதனை சட்டமாக கொண்டு வருவதற்குள் நான் பட்ட பாட்டினை நான்தான் அறிவேன். இதற்காக நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலே ஒரு குழுவினை அமைத்து, அல்லும், பகலும் பாடுபட்டு இது சம்பந்தமான பல சட்டப் பிரிவுகளையும் படித்தாய்ந்து இதற்கான அறிக்கையினை அரசுக்கு அளித்தார்கள். அதன்பிறகு இதனை சட்டமாக கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அரசு உயர் அதிகாரிகள் சிலரிடம் இது குறித்து நான் பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் இந்த சட்டத்தினை கொண்டு வருவதற்கு மேலும் சில கால நீடிப்பு தேவை என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் கூறினேன். இது என்னுடைய சொந்தப்பிரச்சினை. இது எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் நிறைவேறுகிறதோ, அந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைவேன்.
எனவே இந்த மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறே இது நிறைவேறுகிறது. நீதியரசர் ஜனார்த்தனம் இது குறித்த பரிந்துரைகளை அரசிடம் தாக்கல் செய்து, அந்த செய்தி ஏடுகளில் வெளிவந்த நேரத்தில்- இந்த அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 50 பேர் என்னை தலைமை செயலகத்தில் வந்து சந்தித்தார்கள். அப்போது அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, எங்கள் சமுதாயத்திற்காக இவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் செயல்பட்டதில்லை. ஆனால் நீங்கள் இந்த அளவிற்கு எங்களுக்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்காக நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ? எது எப்படியிருந்தாலும் இந்த பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீடு செய்து அது சட்டமாக வர நாங்கள் உங்களோடு துணை இருப்போம் என்று தெரிவித்தார்கள்.
அவர்களின் எண்ணப்படி இன்றையதினம் அருந்ததிய சமுதாயத்தினருக்காக 3 சதவீத உள்ஒதுக்கீடு நிறைவேறுகிறது. இந்த நாள் அவர்கள் வாழ்நாளில் எந்த அளவிற்கு முக்கியமான நாளாக விளங்குமோ, அது போலவே என்னுடைய வாழ்வில் இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு காரணமானவன் நான் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. என் முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, காயம் பரிபூரணமாக குணம் ஆனதில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றேனோ, அதைவிட அதிக அளவிற்கு அருந்ததிய சமுதாயத்திற்காக நடைபெற்றுள்ள சமூகநீதி அறுவை சிகிச்சையில் இன்று முதல் அந்த சமுதாயமே பெரிதும் நலம் அடையப்போகின்றது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சி அடைகின்றன.
அருந்ததியர்களுக்கான நல்வாழ்வை அளித்திடக் கூடிய இந்த மசோதாவை சட்டமாக ஆக்கிட உதவி செய்த அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இந்த சட்டம் வெளிவர பெரிதும் எனக்கு துணையாக நின்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் கடிதத்தை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் வாசித்து முடித்தார். இதையடுத்து சட்ட முன்வடிவு சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.