குடும்பச் சொத்து பங்கீட்டில், ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
2005ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில், பெண்களுக்கு சொத்தில் வழங்குவது குறித்த விசாரணையின்போது, சொத்து பங்கை பிரித்து வழங்கும்போது, ஆண் பிள்ளைகளை போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2005ல் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே பெற்றோரை இழந்திருந்தாலும், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்தில் பெண்களுக்கு சமபங்கு என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு வருமாறு :
“திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறேன்!
பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே - 1989-ம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்பதால், இத்தீர்ப்பை தி.மு.க.வின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.
சமூகம்- பொருளாதாரம்- குடும்பம் என அனைத்துத் தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாகப் பெண்ணினம் தலை நிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும்!”
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.