உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் அது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இத்தாலி, துபாய் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா நோய் இந்தியாவில் பரவியதாக கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த பாதிப்பில் இருந்து தமிழகமும் தப்பவில்லை. ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த தமிழகத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு அவருடன் தொடர்பில் இருந்த 20க்கும் மேற்பட்டோரும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
1,086 பேர் இதுவரை தமிழகத்தில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுப்பது குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சரவணன், பூங்கோதை ஆலடி அருணா, ஆர்.டி.அரசு ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன், “இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டாலும் மறைமுகமாக இன்னும் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரியவில்லை. தீவிர மருத்துவ கண்காணிப்பு நடைபெறவேண்டிய காலகட்டமிது.
விமானநிலையங்களில் கட்டாயம் தீவிர கண்காணிப்பை பலபடுத்த வேண்டும். நாங்கள் வரும் போதும், எவ்வித சோதனைக்கும் ஆட்படுத்தப்படவில்லை. இதுபோல பலர் சோதிக்கப்படாமல் சென்றிருக்க வாய்ப்பு இருக்கலாம். நோய்த்தொற்று ஏதும் பரவாத வண்ணம் தனிநபர் சுகாதாரம் பேணவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.