வயது மூப்பு காரணமாகவும், உடல்நலம் குன்றியதாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் பேராசிரியர் காலமானார். மறைவுச் செய்தி அறிந்து தி.மு.க தலைவர் முதல் கடைநிலை தொண்டர் வரை அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பேராசிரியரின் உடல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் முதற்கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என தொடர்ந்து பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேராசிரியர் பெருந்தகையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அதில், "திராவிட இயக்கத்தின் முது பெரும் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேராசிரியர் இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு, முத்தமிழறிஞர் கலைஞருக்கு தோள் கொடுத்தவர் பேராசிரியர். தனிப்பட்ட முறையில் என் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
வயதில் பெரியவராக இருந்தாலும், கலைஞரின் வார்த்தைகளுக்கும், முடிவுகளுக்கும் கட்டுப்பட்டவர் பேராசிரியர். அவருடன் இருந்து கட்சியை சிறப்பாக வழி நடத்தியவர். பேராசிரியரின் இழப்பு அவரது குடும்பம், தி.மு.க. மற்றும் திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான பேரிழப்பாகும் என தெரிவித்தார்.
முன்னதாக, பேராசிரியர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ”முத்தமிழறிஞர் கலைஞருக்கு தோள் கொடுத்த ஒரு மாபெரும் தலைவர் அவர். பல்வேறு கட்சியினரும், பல்லாயிரக்கணக்கான மக்களும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.